Monday, March 22, 2010

எனக்கு பிடித்த படங்கள்: பட்டியல் – 2


பட்டியல் – 2 (மிகச்சிறந்த திரைக்கதை/கதை/இயக்கம் கொண்ட 9 படங்கள்)
4 படங்கள் இந்தப்பதிவில், மீதம் 5 அடுத்த பதிவில்...
இந்தப்பதிவில், படங்களின் கதையை விட, படங்களில் என்ன சிறப்பு (திரைக்கதை, கதை சொல்லப்படும் விதம், படமாக்கப்பட்ட விதம், புதுமையான இயக்கம், வசனங்கள்) என்பதை அதிகம் பார்ப்போம். ஒவ்வொரு படத்தின் கதையையும் முழுமையாக தனிப்பதிவில் பின்னர் பார்க்கலாம்.
இதுவரை வெளிவந்த படங்களிலேயே, மிகத்திறமையான, கடினமான, வியக்க வைக்கும் திரைக்கதை கொண்ட படம் எது என்றால், யோசிக்காமல் சொல்லலாம் Memento என்று. இரண்டாம் இடத்தில் என்ன படம் இருந்தாலும் இதன் பக்கத்தில் கூட நெருங்க முடியாது.
முதல் விஷயம். நம்ம கஜினி பட்த்தையும், இந்த படத்தையும் ஒப்பிடுவது, LIC பில்டிங்கின் உயரத்தையும் Everest சிகரத்தின் உயரத்தையும் ஒப்பிடுவது மாதிரி.

இதிலும் Short term memory loss உள்ள ஹீரோ காதலியை கொன்றவனைத் தேடுகிறார்தான். பச்சைக்குத்தி கொள்கிறார்தான். ஃபோட்டோ கேமரா வைத்திருக்கிறார்தான். ஆனால் அதுவல்ல இந்தப்படத்தின் ஸ்பெஷல். சரி.. அப்போ என்னதான் ஸ்பெஷல்?
ஒரு காமெடி படம் என்றால், ஹீரோ மட்டும் சிரித்தால் போதுமா? நமக்கும் சிரிப்பு வரணும் இல்லயா? சோகப்படம் என்றால், ஹீரோ மட்டும் அழுதால் போதுமா? நமக்கும் ஒரு ஃபீலிங் வர வேண்டாமா? அது மாதிரி, ஹீரோவுக்கு குழப்பமா இருக்கப்போ, நமக்கும் குழப்பமா இருக்க வேணாமா? அப்போதானே ஹீரோவோட ஃபீலிங்ஸ் நமக்குப் புரியும்? (சரி.. சரி.. மேட்டருக்கு வர்றேன்..)
ஹீரோவுக்கு Short Term Memory Loss. சில நிமிடங்களில் நடந்தது மறந்து விடும். அதனால் யார் நல்லவர், யார் கெட்டவர், யார் நண்பர், யார் எதிரி, யாரை நம்பலாம் நம்பக்கூடாதுன்னு எதுவுமே புரியாது நம்ம ஹீரோவுக்கு. ஹீரோவுக்கு இவ்ளோ குழப்பம் இருக்கப்போ, அந்த குழப்பம் நமக்கும் இருக்கணும் இல்ல. ஆனா நமக்குதான் Short Term Memory Loss இல்லயே. சாதாரணமா கதை சொன்னா, நமக்கு தெரிஞ்சுடும் நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு. அதனால, படத்துல கதையே Reverse-ல போகுது. அதாவது முதல் காட்சியே, கிட்டத்தட்ட climax மாதிரிதான். அந்த காட்சில, அவரு சாகடிக்கறது வில்லன்தானா இல்ல போலீஸான்னு அவருக்கே கொஞ்சம் குழப்பம்தான். நமக்கும்தான். அடுத்த காட்சில அவருக்கு உதவி செய்யற பொண்ணு நல்லவளா இல்ல கெட்டவளான்னு அவருக்கும் கொஞ்சம் குழப்பம். நமக்கும் கொஞ்சம் குழப்பம். இப்படி போகுது கதை.

ஆனா ஒரு Introduction கூட இல்லாம கதை சொன்னா ரொம்ப குழப்பிடுமே! அதனால, ஒவ்வொரு reverse காட்சிக்கு நடுவிலேயும் ஒரு ஃப்ளாஷ்பேக் ஓடுது. (கருப்பு வெள்ளையில், ஆனால் ஃப்ளாஷ்பேக் reverse-ல் அல்ல. நேராக.) அதுல ஹீரோ தனக்கு எப்படி இப்படி ஆச்சுன்னு சொல்றாரு. மொத்தம் 44 காட்சிகள். 22 காட்சிகள் கலரில். 22 ஃப்ளாஷ்பேக் காட்சிகள் கருப்பு வெள்ளையில். தற்போது நடக்கும் 22 காட்சிகளை A முதல் V வரையும் (A முதலில் நடந்தது, V பின்னர் நடந்தது), ஃப்ளாஷ்பேக் 22 காட்சிகளை 1 முதல் 22 வரையும் வைத்துக்கொண்டால் (1 முதலில் நடந்தது, 22 பின்னர் நடந்தது), இப்படித்தான் போகிறது படம்: V1U2T3S4R5Q6…..C20B21A22. (நன்றி:Wikipedia)

ஸ்ஸ்ஸப்ப்பா... இத சொல்றதுக்கே கண்ணக்கட்டுதே.. இத எப்படிதான் உக்காந்து யோசிச்சாங்களோ தெரியல. இப்படி ஒரு குழப்பமான கதைய, எவ்வளவு அருமையா பின்னியிருக்காங்கன்னு குறைந்தது 2 முறையாவது பார்த்தாதான் புரியும். நான் கொஞசம் late pickup. 4 தடவை பார்த்தப்பறம்தான் சுமாரா புரிஞசது.
ஆனா, ஏதோ குழப்பிட்டாங்கன்னு மட்டும் எல்லோரும் இந்தப்படத்தை இவ்வளவு புகழவில்லை. அந்த குழப்பம் தீர்ந்து, கதை புரியும்போது, இயக்குனர் Christopher Nolan-ன் திறமையும் புரியும் (அவரோட முதல் படம்!! அதுலயே ஆஸ்கரை வாங்கிட்டாரு.). 4 சுமாரான படம் பார்க்கறதுக்கு, இந்த படத்தை 4 தடவை பார்க்கலாங்க.
சுருக்கமா சொல்லிடணும்னு ஆரம்பிச்சதே ஒரு பக்கம் போயிடுச்சு!! கூடிய சீக்கிரம் இந்தப்படத்தைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
The Matrix (1999)
இந்தப் படத்தைப் பற்றி நிச்சயம் கேள்விப் பட்டிருப்பீங்க. நிறைய பேர் பார்த்தும் இருப்பீங்க.
இந்Physics மேதைகள் எல்லாம் சும்மா இல்லாம, உலகம் எப்படி உருவானது ஏன் இப்படி இருக்குனு யோசிச்சு, அந்த தியரி(theory), இந்த தியரின்னு ஏதாவது கண்டுபிடிப்பாங்க. அந்த மாதிரி, Matrix படத்தோட டைரக்டர்ஸ் Wachowski Brothers இந்த பட கதைக்காகவே, உலகம் இப்படியும் உருவாகி இருக்கலாம்னு ஒரு தியரியை யோசிச்சுருக்காங்கன்னா பார்த்துக்குங்க... அது என்ன தியரின்னா..

நாம பார்க்கறது, கேக்கறது, உணர்வது எல்லாமே நரம்புகள்தான் மூளைக்கு சிக்னலா எடுத்துட்டு போகுது. சரி.. நமக்கெல்லாம் கனவு எப்படி வருது? நாம தூங்கறப்போ, இந்த மூளை சும்மா இல்லாம ஏதாச்சும் சிக்னல தூண்டி விடுது.(பயாலஜி படிச்சவங்க தப்புன்னா சொல்லுங்க) அதாவது நாம உண்மையிலேயே ஷ்ரேயாவை பார்க்கலேன்னாலும், பார்த்த மாதிரி சிக்னல் நம்ம மூளைக்கு தோண்றதுனால, நமக்கு முழிப்பு வர்ற வரை அதுதான் உண்மை மாதிரி தெரியுது. அது மாதிரி, ஏன் இந்த வாழ்க்கையே ஒரு பெரீய்ய்ய்ய கனவாக இருக்க கூடாது?
அதாவது இப்ப நாம எல்லாரும், வேற எங்கேயோ படுத்து தூங்கிட்டு இருக்கோம். நான் இந்த ப்ளாக்கை எழுதறது மாதிரி கனவு காணறேன். நீங்க இத படிக்கற மாதிரி கனவு காணறீங்க. உலகமே ஒரு கனவுதான். உண்மையான உலகத்த இதுவரை யாருமே பார்த்ததில்லை. நாம எல்லாருமே பொறந்ததுல இருந்து சாகற வரைக்கும் தூங்கிட்டுதான் இருக்கோம், அந்த உண்மையான உலகத்துல எங்கயோ படுத்துகிட்டு. சரியா சொல்லணும்னா, நாம எல்லாரும் ஒரு முடிவில்லாத மாய கனவு உலகத்துல இருக்கோம். வாழறோம். சாகறோம். சரி.. எல்லாரும் எப்படி ஒரே கனவில இருக்க முடியும்? எல்லாருக்கும் வேற வேற கனவு தானே வரும்? அதனாலதான், நம்ம எல்லாரோட மூளையும் ஒயர் வச்சு கனெக்‌ஷன் கொடுத்து இருக்காங்க அந்த உண்மையான உலகத்துல. சரி.. இதனால யாருக்கு என்ன லாபம்? யாரு ஆரம்பிச்சா இத? எல்லாம் இந்த ரோபோக்கள்தான். அதுங்கதான் தூங்க வைக்கப்பட்ட மனுஷங்களை மேற்பார்வையிடுது. மனுஷங்க உடம்பில் இருந்து வரும் எனர்ஜியை உபயோகப்படுத்திக்குது!! ஆக, நம்ம எல்லாரும் ஒரு பாட்டரி செல் போல பயன்படுத்தப்படுகிறோம். அதுங்கதான் உண்மையான உலகத்துல வாழ்ந்துகிட்டு இருக்கு. நாமெல்லாம் அதுங்க படைச்ச மேட்ரிக்ஸ் எனும் கம்ப்யூட்டர் உலகத்துல (நம்ம பூமிதாங்க..) வாழ்ந்துகிட்டு இருக்கோம்.

இதுதாங்க இந்த டைரக்டர்கள் சொல்லும் தியரி. சரி கதை என்ன? இந்த உண்மை தெரிஞ்ச, உண்மையான உலகத்தில் வாழும் எஞ்சியிருக்கும் சில மனிதர்கள் மக்களை போலியான கற்பனை உலகத்தில் இருந்து வெளியே கொண்டு வரணும்னு பார்க்கறாங்க. அதுக்கு துணையா, கற்பனை உலகத்துல, அதாவது நாம இருக்கற பூமியில, வாழற அசாத்திய திறமை கொண்ட நம்ம ஹீரோவையும் சேர்த்துக்கறாங்க. இந்த குழுவுக்கும், ரோபோக்களுக்கும் நடக்கும் போராட்டத்தை, அபாரமான ஆக்‌ஷன் படமாக எடுத்து இருக்காங்க.

ஒவ்வொரு வசனமும், அர்த்தம் பொதிந்தது. கொஞ்சம் யோசிச்சாதான் புரியுது, என்ன சொல்லறாங்கன்னு. இவ்வளவு சொன்னப்பறமும் மிஸ் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறேன். இன்னும் விரிவாக விரைவில்...
Eternal Sunshine of the Spotless Mind (2004)
இந்த படத்துலயும் திரைக்கதையை சொல்லிய விதமும், படமாக்கி இருக்கும் விதமும் ரொம்ப ஸ்பெஷல். நம்ம ஹீரோ Jim carrey-ம் ஹீரோயின் Kate Winslet-ம் காதலிச்சு, அப்பறம் சண்டை போட்டுகிட்டு பிரிஞ்சவங்க. ஹீரோயின் ஹீரோவோட ஞாபகத்தை முழுமையா மறக்கணும்னு, குறிப்பிட்டவரின் ஞாபகங்களை நம் மூளையில் இருந்து அழிக்கும் ஆபரேஷன் செஞ்சுக்கறாங்க. அதன் பிறகு ஹீரோவை அவங்களுக்கு அடையாளம் கூட தெரியாது. இது தெரிஞ்ச ஹீரோ டென்ஷன் ஆகி அவரும் அந்த ஆபரேஷன் செஞ்சுக்கறாரு. அதாவது, இந்த ஆபரேஷன் பண்ற டாக்டர்கிட்ட பணமும், யாருடைய ஞாபகங்களை அழிக்கணும்னு டீடெய்ல் சொல்லிட்டா போதும். நமக்கு தூக்க மாத்திரை கொடுத்து, நம்ம வீட்டுக்கே வந்து ஆபரேஷன் பண்ணிட்டு சத்தமில்லாம போயிடுவாங்க. அடுத்த நாள் காலையில அப்படி ஒரு பொண்ணு இருந்தான்னே மறந்துடும்.
அப்படி ஆபரேஷன் செய்யப்படும் போது, ஞாபகங்கள் கடைசியில் இருந்து அழிக்கப்படும். அதாவது, சமீபத்தில் நடந்தவை முதலில் அழிக்கப்படும். முன்னர் நடந்தவை கடைசியில் அழிக்கப்படும். பாதி ஆபரேஷன் நடக்கும்போது, ஹீரோவுக்கு சமீபத்தில் நடந்த சண்டை எல்லாம் மறந்து, முன்னர் உருகி உருகி காதலித்தது மட்டும் ஞாபகம் இருக்கு. ஏன் அவளையே காதலிக்கக்கூடாதுன்னு நினைக்கிறார். அவளைப் பற்றிய ஞாபகங்கள் வேண்டுமெனில், ஆபரேஷனை நிறுத்தியாக வேண்டும். ஆனால் ஆபரேஷன் பாதியில் அவராக எழ முடியாது. எல்லாம் அழிக்கப்படுகிறது. பின்னர் என்ன நடக்கிறது என படத்தில் பாருங்கள்.
சரி.. இந்த படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் திரைக்கதை உள்ளது? ஹீரோவுக்கு ஆபரேஷன் நடக்கும்போது அவருக்கு நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை காண்பிக்கும் காட்சிகளே படத்தின் 75 சதவீதம். உதாரணத்துக்கு, ஹீரோவும் ஹீரோயினும் ஒரு காட்சியில் வீட்டு சமையல் அறையில் பேசியிருக்கிறார்கள். அடுத்த நாள், ஆஃபீஸில் பேசியிருக்கிறார்கள். அந்த நினைவுகள் அழிக்கப்படுவதாக படமாக்கி இருப்பது இப்படி: இருவரும் ஆஃபீஸில் பேசிக்கொள்கிறார்கள், ஆஃபீஸை விட்டு வெளியே வர வர பின்பக்கம் காட்சிகள் மங்கிப்போகின்றன. வெளியே வந்தால், அது சமயலறை!! அடுத்த காட்சி. இப்படியாக, காட்சிகள் பொருத்தப்பட்டு, பழைய ஞாபகங்களின் வசனங்களும், தற்போது ஆபரேஷன் நடக்கும்போது ஹீரோ பேச நினைக்கும் வசனங்களும், கனவு போல மாறி மாறி கலந்து வருவதும் அருமை. இப்படிப்பட்ட ஒரு படத்திற்கு காதல் இழையோடும் க்ளைமாக்ஸ் மிக அருமை.
இப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார், Charlie Kaufman.
Rope (1948)
பிரபல டைரக்டர் ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்கின் மிகச்சிறந்த படம். அவருடைய மற்ற படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட த்ரில் என்கிற ஒரு விஷயத்திலேயே அடங்கிவிடும். த்ரில்லையே எவ்வளவு வித்தியாசமாக காட்ட முடியும் என்ற முயற்சியே அதிகம் தெரியும். ஆனால், இந்தப்படம் வேறு வகை. விறுவிறுப்பு மட்டுமின்றி, ஒரு டைரக்டர் புதுமையை எந்த விதத்தில் எல்லாம் புகுத்தலாமோ, அத்தனையும் செய்துள்ளார்.
முதலில் படம் வெளிவந்த வருடமும் (1948), அப்பொழுதிருந்த தொழில்நுட்பமும் நமக்குப் புரிய வேண்டும்.
1. ஒரே வீட்டினுள்தான் முழுக்கதையும் நடக்கிறது.
2. மொத்தமே 9 பேர்தான் படத்தில். அதன் பின் இது போல பல படங்கள் வந்தாலும், இதுவே முதல் முயற்சி.
3. 1948-ல் கலர் கேமிரா உபயோகமே மிக மிகக் குறைவு. டெக்னிகலர் கேமிரா அப்போது மிகப்பெரிய சைஸில் இருந்துள்ளது. அதை ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு கொண்டு போக வேண்டுமெனில், அறைக்கதவு அகலம் பத்தாது. எனவே, மொத்த வீடும் செட்தான். அதாவது, கேமிரா ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு நகரும்போது, உதவியாட்கள் செட்டையே கொஞ்சம் நகர்த்தி கேமிராவுக்கு வழிவிடுவர். (படம் பார்ப்பவர்களுக்கு தெரியாது). பின்னர் மீண்டும் நகர்த்தி ஒட்ட வைத்து விடுவர். இதற்காக வீட்டின் செட் முழுதும் சக்கரம் வைத்து வடிவமைத்து உள்ளனர்.
4. இதுதான் ஹைலைட். 80 நிமிட படத்தில் மொத்தமே 10 ஷாட்தான்!! அதாவது ஒவ்வொரு ஷாட்டும் 7 முதல் 10 நிமிடங்கள் வரை!! தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மனப்பாடமாக வசனம் பேச வேண்டும். அனைவரும் அவரவர் வசனம் வரும்போது, சரியான நேரத்தில் பேச வேண்டும். ஒருவர் சொதப்பினாலும், மீண்டும் முதலில் இருந்து ஷாட். கிட்டத்தட்ட மேடை நாடகம் போல்தான். ஆனால், இது திரைப்படம். துல்லியமாக இருக்க வேண்டும். பலராலும் பல முறை பார்க்கப்படும். விவாதிக்கப்படும்.
5. James Stewart போன்ற நடிப்பு மன்னனை வைத்துக் கொண்டு, 10 நிமிட வசனம் பேசுவது பெரிதல்ல. ஆனால் ஏன் 10 நிமிடம் மட்டும்? ஏனென்றால், கேமிரா ரோலின் நீளம் 10 நிமிடம் தான். புது ரோலை போடுவதற்காக கட் செய்துதான் ஆக வேண்டும். ஆனால், ஹிட்ச்காக் முழுப்படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்தது போல காட்ட விரும்பினார். எனவே, ஒரு ஷாட் முடியும்போது மேஜைக்குப் பின்னாலோ, ஆட்களின் பின்னாலோ கேமரா ஒரு செகண்ட் சென்று விடும். அடுத்த ஷாட் அங்கிருந்து தொடங்கும். நமக்கு பார்க்கும்போது ஒரே ஷாட் போல தெரியும். இப்படியே படம் முழுவதும் ஒரே ஷாட் போல எடுத்துள்ளார். கிட்டத்தட்ட எடிட்டருக்கு வேலையே கிடையாது. 10 ஷாட்களையும் ஒட்ட வைத்தால் போதும்.
6. அறையில் மேஜை, சோஃபா என பல பொருட்கள். இத்தனையும் தாண்டி பெரிய கலர் கேமிரா பயணம் செய்ய முடியாது. எனவே கேமிரா நகரும்போது, இந்த பொருட்களையும் உதவிக்குழு ஆட்கள் நகர்த்தவேண்டும். கன்டின்யுவிட்டி (continuity) இருக்கவேண்டும். எனவே, கேமிரா மீண்டும் வருமுன் பொருட்களை மீண்டும் அதே இட்த்தில் வைக்கவேண்டும். ஆட்கள் மற்றும் பொருட்களின் நிழல் தெரியக்கூடாது. இதெல்லாம் இப்போதுள்ள டெக்னாலஜியிலும், அவதார் போன்ற படங்களின் முன்னும் தூசுதான். ஆனால், இதை 62 வருடங்களுக்கு முன்பே செய்திருப்பது ஆச்சரியம். அப்போதைய மற்ற படங்களுடன் ஒப்பிட்டால் இது புரியும்.
7. அந்த வீடு ஒரு அபார்ட்மெண்டில் இருப்பது போல வடிவமைத்து உள்ளனர். ஜன்னலின் வெளியே வானம் மற்றும் கட்டிடங்கள் தெரியும். இது அனைத்தும் செட். அப்போதைய சினிமா வரலாற்றில், மிகப்பெரிய செட் அதுவே. ஹிட்ச்காக் படம் முடித்ததும்தான் கவனித்தார், அந்த செட்டில் உள்ள வானத்தின் நிறம் நேரமாக ஆக, மாறி இருக்க வேண்டும். ஆனால் மாறவில்லை. எனவே, நிறம் மாறுவதுபோல் செட் அமைத்து, பாதிப்படத்தை மீண்டும் எடுத்துள்ளார்.!!
புதுமை மட்டுமல்ல. த்ரில்லுக்குப் பஞ்சமேயில்லை. பார்க்க ஆரம்பித்தால் நிறுத்த முடியாது படம் முடியும் வரை. அப்படி என்ன கதை?
இரு கல்லூரி மாணவர்கள், தங்களின் கல்லூரி நண்பன் ஒருவனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, வீட்டில் டைனிங் டேபிள் அடியில் உடலை வைத்துவிட்டு, மற்ற நண்பர்களையும், கொலை செய்யப்பட்டவனின் அப்பா மற்றும் காதலியை விருந்துக்கு அழைக்கின்றனர்!! எதற்கு? தங்களின் கொலை செய்யும் திறமையை பரிசோதிப்பதற்கு!! அவர்கள் பிடிபட்டனரா? நீங்களே பாருங்கள்.

உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் இடுங்கள். நன்றி. பிடிச்சிருந்தா ஓட்டும் போடுங்க, இன்னும் பலர் படிக்கட்டும்.




Related Posts with Thumbnails

26 comments:

  1. மிக அழகான விமர்சனம். படம் பார்க்கத்தூண்டுகிறது. தொடருங்கள் பாஸ்.

    ReplyDelete
  2. நாலு தடவ பார்த்தாதான் புரியுமா? அப்பா சாமி ஆளை விடுங்க!

    ReplyDelete
  3. Rope ப‌ட‌ம் பார்த்திருக்கிறேன், கொஞ்ச‌ம் கூட‌ எதிர்பார்க்க‌வில்லை....அச‌த்தியிருந்தார் ஹிட்ச்காக்

    ReplyDelete
  4. its so thrilling ...Balaji
    thanks for sharing

    ReplyDelete
  5. மிகவும் ரசித்த வரிசை

    ReplyDelete
  6. நீங்க சொன்னதும் படத்தை திரும்பவும் பார்க்கத்தோனுது. விமர்சனம் டபுள் ஓகே........

    ReplyDelete
  7. :)

    நல்ல தொடக்கம் நண்பரே... நல்ல முயற்சி!

    ReplyDelete
  8. கலக்குங்க.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  9. நீங்களும் ஆரம்பிச்சாச்சா "அதிரடி ஆட்டத்தை." நல்லா இருக்கு,கலக்குங்க

    ReplyDelete
  10. நண்பரே,

    சிறப்பான பதிவு.

    ReplyDelete
  11. super padhivunga balaji :) :)

    memento va pathi neenga sonnadhu 100/100 unmai... sema screenplay.. apdi ellam yosichu neat-ah oru padam kodukrathu romba kastam..

    oru samayam Murugadoss oru petti-la solli irundhar... Memento romba kozhapama irukkum... naanga super-ah kodurukkom nu...

    indha padatha paatha apram thoonuchu... "andha maathiri oru padam ennala apadiye edukka mudiyathu'-nu avar solli irukalam... :) :)

    matrix.. screenplay enna avalava kavarala... but concept sema weight... action movies ku athu oru benchmark...

    matha rendu padathaiyum innum paakala.. paathutu solrenga :) :)

    sema thodakkam... kalakkunga :) :)

    ReplyDelete
  12. // இந்த படத்தையும் ஒப்பிடுவது, LIC பில்டிங்கின் உயரத்தையும் Everest சிகரத்தின் உயரத்தையும் ஒப்பிடுவது மாதிரி.//

    ஏன் அப்படி





    மேல நீங்க சொன்னமாதிரி கிட்டதட்ட எல்லாத்தையும் காப்பி அடிச்சாச்சு,கருவே சார்ட் டேர்ம் மெம்மரி லாஸ்தான் அப்புறம் பச்ச,ரிவஞ்ச் இது தான் ஸ்டோரி
    அசினுக்கு அமலில இருந்து வேற கொஞ்சம் சீன் :-))

    ஆனா எனக்கு இந்தப்படம் ஒரு 1 மணி நேரத்துக்குமேல பாக்கமுடியல கடுப்படிச்சுது

    ReplyDelete
  13. சுவாரஸ்யமான பதிவு !! பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  14. Superb.. It is very difficult to explain Matrix in few words.. Your synopsis was excellent..

    ReplyDelete
  15. இதில்... ரோப் மட்டும் பார்க்கலைங்க. தகவல்கள் எல்லாம்.... ரொம்ப இம்ப்ரஸ் பண்ணுது. உடனே நெட்ஃப்ளிக்ஸில் போட்டு வச்சிட்டேன்.

    கலக்குங்க தல...!! :)

    ReplyDelete
  16. படம் பார்க்க தூண்டும் விமர்சன நடை,அருமை
    வாழ்த்துகள்.

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  17. The Matrix கதைன்னு போட்டிருக்கீங்களே. அது சரியா? படம் பற்றின என் புரிதல், இங்கே.

    http://jeeno.blogspot.com/2006/07/matrix.html

    ReplyDelete
  18. சீனு, நீங்க எழுதியிருக்கறது ரொம்ப ரொம்ப சரி.. ஆனா, அதேதானே நானும் எழுதியிருக்கேன்.. எந்த இடத்துல வேறுபடறோம்னு சொன்னீங்கன்னா, சரியான்னு சொல்லலாம்..

    ReplyDelete
  19. அருமையான பணி.
    மேட்ரிக்ஸ் படம் பத்தி ஓரளவு இப்பத்தான் கொஞ்சம் விளங்கிச்சு,. பார்க்கும் போது ஒரு மண்ணும் பிரில... நன்றி ஜெய்

    ReplyDelete
  20. நேத்து நீங்க சேட் பன்னிய போது இந்த Memento படத்தை தான் பாத்துக் கொண்டிருந்தேன். படத்தை பற்றின என் கருத்து அப்புறம்.

    படத்துல 2 சீன் ரொம்ப பிடிச்சது.

    லென்னி: இப்ப நான் என்ன பன்னுறேன்.
    ஓ...அவனை துரத்தறேன்...
    (இரண்டு கன் ஷாட்)
    இல்லை...அவன் தான் என்ன துரத்தறான்.

    இன்னொரு சீன்.

    லென்னி: இப்ப நான் எங்க இருக்கேன்...
    (டெட் வருகிறான்)
    ஏதோ சத்தம் கேட்க அந்த அலமாறியை திறக்க அங்கே டாட்டை யாரோ கட்டி போட்டிருக்கிறார்கள்.
    லென்னி: ஓ...இது அவன் வீடு போல இருக்கு...

    நான் நினைக்கிறேன், படத்துல அவன அந்த டெட் அவனை உபயோகிச்சு ஜிம்மியை கொலை செய்ய வைக்கிறான். இதை தெரிந்து நடாலி மறுபடியும் அவனை வைத்து டாட்டையும் பின் டெட்டையும் கொலை செய்ய வைக்கிறாள் என்று. தெரியவில்லை. இன்னொரு முறை பார்த்தால் புரியும்.

    அப்புறம், இந்த படத்துல் லென்னிக்கு Short term memory loss இல்லை, anterograde amnesia.

    ReplyDelete
  21. "Eternal Sunshine of the Spotless Mind"

    Can you hear 3 Hindi songs in the background (One song "Ore jeevan onRe Ullam" - from Neeya) @ 10 th minute of the movie.

    ReplyDelete
  22. ஜெய், பட்டியல் 1 மற்றும் 2 பிரமாதம்!
    இதில் இன்னும் நான் பார்க்கவேண்டிய படங்கள் உள்ளன....பார்க்க முயற்சிக்கிறேன்.
    விமர்சனத்தின் ஊடே திரைப்பட தொழில்நுட்ப செய்திகள் அருமை, உ.த: rope படம்
    நண்பரே, நீங்கள் விமர்சனம் எழுத இதை கற்றுக்கொண்டிர்களா அல்லது இவற்றை எல்லாம் குறித்து தெரிந்ததால் திறமையான விமர்சனம் எழுத முடிகிறதா..? பாராட்டுக்கள்!!

    - நவிச்சு

    ReplyDelete